உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: இனி திருமணமான மகள்களுக்கும் அரசின் சலுகைகள் உண்டு!
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியை சேர்ந்தவர் குல்சம் நிஷா. இவருடைய தாயார் பத்ருன்னிசா உரிமம் பெற்று நியாய விலைக் கடையை நடத்தி வந்த நிலையில், குல்சம் நிஷாவுக்கு திருமணமாகி, தனது 4 சகோதரிகளுடன் தாயாருக்கு உதவியாக இருந்து வந்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு பத்ருன்னிசா இறந்துவிட்டதால், அந்த கடையின் உரிமத்தை கருணை அடிப்படையில் தனக்கு அளிக்க கோரி குல்சம் நிஷா விண்ணப்பித்திருந்தார். ஆனால், குல்சம் நிஷாவுக்கு திருமணமானதை குறிப்பிட்டு, அவருக்கு கடையின் உரிமத்தை வழங்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குல்சம் நிஷா, அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மனுவை தள்ளுபடி செய்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், அரசின் ஆணைப்படி ஒரு திருமணமான மகள், குடும்பம் என்ற வரையறைக்குள் வரமாட்டார் என்று தெரிவித்தது.
இதையடுத்து, குல்சம் நிஷா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று அலாகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஒதுக்கி வைத்து தீர்ப்பளித்தது.
அதில், "திருமணமான மகள்" என்று காரணம் கூறி, குடும்பத்தில் இருந்து ஒரு பெண்ணை விலக்கி வைத்து பார்ப்பது நியாயமற்றது" என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், "திருமணம் என்பது, ஒரு மகளுக்கும் அவளுடைய பெற்றோரின் குடும்பத்திற்கும் இடையிலான பந்தத்தை இழக்கச் செய்யாது. சமூகத்தில் இன்று திருமணமான பல பெண்கள், தொடர்ந்து தங்கள் பெற்றோருக்கு ஆதரவாக, அவர்களுடனேயே வசித்து வருவதை பார்க்க முடிகிறது.
ஒரு மகன், திருமணத்திற்குப் பிறகு அவருடைய பெற்றோருடன் வசிக்கும்போது அந்த குடும்பத்தில் ஒருவராக தொடர்கிறார். ஆனால், ஒரு மகள் திருமணமான பிறகு அவருடைய பெற்றோரின் குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார். இந்த நடைமுறை, அரசியலைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவத்திற்கு எதிரானது. இது, அரசியலமைப்பு சட்டம் ஒழிக்க முற்படும் பாலின சமத்துவமின்மையை தொடர்ந்து நிலை நிறுத்தும் வகையிலும் உள்ளது.
எனவே, மனுதாரர் குல்சம் நிஷாவுக்கு உடனடியாக நிவாரண உதவியை வழங்கி, அவருக்கு 4 வாரங்களில் நியாய விலைக் கடையை சம்பந்தப்பட்ட துறையினர் ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.