×

நீதிமன்ற அவமதிப்பு.. கே.சண்முகம் உட்பட 11 பேர் மீது வழக்கு - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

 

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற போட்டித் தேர்வின்படி நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியல் தயாரிப்புக்கு இடஒதுக்கீடு, இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை தமிழ்நாடு அரசு 2003ஆம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது. இதை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதனால் 2016ஆம் ஆண்டு புதிய சட்டம் இயற்றி, அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது அரசு. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் பலர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பும் வந்தது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அரசு நாடியது. ஆனால் 2019ஆம் ஆண்டு மேல்முறையீட்டை மறுபடியும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

இருப்பினும் உயர் நீதிமன்ற தீர்ப்பை அரசு அமல்படுத்தவில்லை. இதனை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து ஹைகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு 4 வாரங்களில் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கானது முன்னாள் தலைமைச் செயலர் கே.சண்முகம், இப்போதைய உள்துறை செயலர் எஸ்கே பிரபாகர், முன்னாள் டிஎன்பிஎஸ்சி செயலர் விஜயகுமார் உள்ளிட்ட 9 அரசு அதிகாரிகள் மீது தொடரப்பட்டிருந்தது. அதேபோல இவர்கள் நீதிமன்றத்தில் உண்மையை மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் அவமதிப்பை உறுதி செய்தது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "அதிகாரிகள் அனைவரும் நன்னடத்தையுடன் பணியாற்றவர்கள். ஆகவே அவர்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது” என கேட்டுக்கொண்டனர். 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதிகாரிகள் மீதான நடவடிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது. "ஆனால் அதிகாரிகளின் செயல்பாடுகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது. அரசுக்கு அறிவுரை சொல்லும் நிலையில் இருக்கும் அதிகாரிகள் இவ்வாறு அரசுடன் இணைந்து தவறு செய்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. வருங்காலங்களில் யாரும் இவ்வாறு செயல்பட கூடாது என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” என நீதிமன்றம் கூறியது.