“ஜான் ஜெபராஜ் மிகவும் நல்லவர்...” அவர் மீது பொய்யான பாலியல் புகார்- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கோவையில் போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது இரண்டு சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கத்தினர், ஜான் ஜெபராஜ் மீது போடப்பட்டு உள்ள வழக்கு கால்புணர்ச்சி காரணமாக பொய் வழக்காக புனைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், எனவே இந்த வழக்கை அரசு பரிசீலனை செய்து வழக்கின் உண்மை போக்கு என்ன என்பதை காவல் துறை வெளிப்படையாக கூற வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும் சொந்த இடம் மற்றும் வாடகை இடத்தில் ஜெபக் கூட்டம் தடையின்றி நடத்தப்பட வேண்டும், ஜெபக் கூட்டம் நடத்தும் பொழுது இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், ரோமன் கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ சபை போல் பெந்தகோஸ்தே குழுவினரையும் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும், ஜான் ஜெபராஜ் குறித்து சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த இயக்கத்தின் நிறுவனர் ஜோஸ்வா ஸ்டீபன் கூறுகையில் தற்பொழுது ஜான் ஜெபராஜ் மீது புகார் அளித்தவர்கள் கடந்த 11 மாதங்களுக்கு முன்பே இதே போன்ற ஒரு புகாரை அளித்து இருந்ததாகவும் அதில் காவல் துறையினர் விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத பட்சத்தில் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே இதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். ஜான் ஜெபராஜ் க்கும் அவரது மனைவிக்கும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கருத்து வேறுபாடு பிரச்சனை இருந்து வரும் சூழலில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பிட்டார். மேலும் இது சம்பந்தமாக ஆர்ப்பாட்டத்தை நாங்கள் அறிவிக்கும் பொழுது பல்வேறு தரப்பிலிருந்து தங்களை செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்த அவர், ஜான் ஜெபராஜ் பங்கேற்ற சபையின் உதவியாளர் எட்வின் ரோஸ் என்பவர்கள் மீதுதான் எங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுமேயானால் அடுத்த கட்டமாக போராட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.