'லியோ' சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டார்! 'ஜெயிலர் 2' ஓடிடி உரிமை ரூ.160 கோடிக்கு விற்பனை!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன் , யோகி பாபு , சிவராஜ் குமார் , மோகன்லால் , சுனில் உள்ளிட்ட ஏராளமான தென்னிந்தியாவின் பிரபலமான நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்திற்கு பின்னர் ஜெயிலர் திரைப்படம் தான் ₹500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் பணியாற்றிய முக்கிய நடிகர்கள் , முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர் , இயக்குனர் என அனைவருக்கும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் விலை உயர்ந்த அன்பளிப்புகளை வழங்கி இருந்தது.
ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், அதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
முதல் பாகத்தில் நடித்த பல்வேறு நடிகர்களும் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் பாலிவுட் சூப்பர் ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஹிருத்திக் ரோஷன் ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது வெளிவந்துள்ள தகவல்களின் படி, ஜெயிலர்- 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமை ₹160 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓடிடி விற்பனை தொகையாக இருக்கின்றது. இதற்கு முன்னர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ ' திரைப்படத்தின் ஓடிடி உரிமை ₹120 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த சாதனையை ரஜினி, ஜெயிலர் -2 திரைப்படத்தின் மூலமாக முறியடித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்தின் ஓடிடி உரிமைகள் ₹75 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. அந்த காலகட்டத்திலும் அந்த தொகை மிகவும் அதிகமாக இருந்தது. இதற்குப் பின்னர் ரஜினி நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தின் ஓடிடி உரிமை ₹120 கோடிக்கு விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் திரைப்பட வெளியீட்டு தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கான வேலைகள், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.