×

சன்னி லியோன், ஜானி சின்ஸைத் தொடர்ந்து அடுத்த அதிரடி! –பெண்களுக்கான அரசுப் பணத்தை 12 மாசமா வாங்கிய ஆண் நபர்.!  

 

சத்தீஸ்கர் மாநிலம், கைராகர் மாவட்டத்தின் முதிப்பார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் திலோக் சாகு. 'மஹதாரி வந்தன் யோஜனா' திட்டம் தொடங்கப்பட்ட போது, ஆன்லைன் தளத்தில் அதன் செயல்பாட்டை சோதித்துப் பார்ப்பதற்காக இவர் தனது பெயரிலேயே விண்ணப்பித்துள்ளார்.

இதில் ஆச்சரியப்படும் விதமாக, அந்த விண்ணப்பத்தில் பயனாளி பெயரின் இடத்திலும் 'திலோக் சாகு' என்றும், கணவர் பெயரின் இடத்திலும் 'திலோக் சாகு' என்றே அவர் குறிப்பிட்டிருந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த, 21 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் கைம்பெண்கள் ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது.

ஆனால், திலோக் சாகு சமர்பித்த விண்ணப்பத்தை அதிகாரிகள் முறையாக சரிபார்க்காமல், அங்கன்வாடி ஊழியர் மட்டத்திலும், மேற்பார்வையாளர் மட்டத்திலும் அடுத்தடுத்து ஒப்புதல் வழங்கி அதனை ஆன்லைனில் ஏற்றுக் கொண்டு, அவரது பெயரை பயனாளிகள் பட்டியலில் சேர்த்தனர்.

அதிகாரிகளின் இந்த தவறால், திலோக் சாகுவின் வங்கிக் கணக்கிற்கு தொடர்ந்து கடந்த 12 மாதங்களாக மகளிர் உதவித்தொகை தடையின்றி அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர், இந்தத் திட்டத்தின் பயனாளிகள் பட்டியலை எடுத்து ஆய்வு செய்த போது, திலோக் சாகு என்ற ஆணின் பெயர் அதில் இடம் பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, அதிகாரிகளிடம் உடனடியாக புகார் அளித்தார்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடு அம்பலமானதை அடுத்து, திலோக் சாகுவின் கணக்கிற்கு அனுப்பப்பட்ட தொகையை அரசிடம் மீண்டும் செலுத்துமாறு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் வங்கிக்குக் கடிதம் அனுப்பப்பட்டு, முழுத் தொகையும் அரசு கணக்கில் திரும்ப பெறப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட அந்த போலி விண்ணப்பம் நிரந்தரமாக முடக்கப்பட்டு, திட்டத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஒரு ஆண் விண்ணப்பித்திருந்தும், அதனைப் பெண்களுக்கான கணக்கில் சேர்த்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சரிபார்ப்பு அதிகாரிகள் மீது தற்போது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே திட்டத்தில் இதற்கு முன்பு, பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரிலும், ஜானி சின்ஸ் பெயரிலும் போலி ஆவணங்கள் மூலம் கணக்குகள் தொடங்கப்பட்டு நிதி முறைகேடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.