அன்பில் மகேஸின் நண்பர் வாளாடி கார்த்திக்கிற்கு சம்மன்!
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்தது தொடர்பாக அன்பில் மகேஸின் நண்பர் வாளாடி கார்த்திக்கிற்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி,பல கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர், பல்வேறு நபர்களிடம் விசாரணை செய்து, ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கடந்த 16ஆம் தேதி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான இடங்களில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையிட்டு தொடர்ந்து,விசாரணை செய்து வருகின்றனர்.
அன்பில் மகேஸின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்தது தொடர்பாக அன்பில் மகேஸின் நண்பர் வாளாடி கார்த்திக்கிற்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். வாளாடி கார்த்திக் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என போலீசார் துருவிதுருவி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.