×

குட்கா முறைகேடு வழக்கில் திடீர் திருப்பம் - சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் 

 

கடந்த  2017ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சென்னையில் விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்,  வணிகவரித்துறை அதிகாரிகள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதை வருமானவரித்துறை அதிகாரிகள் உறுதி செய்த நிலையில் பல இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

குட்கா  ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா ஆகியோரை விசாரிக்க தமிழ்நாடு அரசிடம் சிபிஐ அனுமதி கோரி கடிதம் வழங்கியது.   முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற ராஜேந்திரன் , ஜார்ஜ் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய அனுமதி கோரியது. முன்னாள் அமைச்சர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி வேண்டும் என்பதன் காரணமாக சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. 

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.