அரசியலில் திடீர் திருப்பம் : விஜயை நேரில் சந்தித்து ஆதரவளிக்க அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் முடிவு..?
தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக, மூன்றாம் இடத்தையே பெற்றுள்ளது. அந்த கட்சி சார்பில் வெற்றி பெற்ற 47 எம்எல்ஏ.,க்களில் பெரும்பகுதியினர் நேற்று சி.வி.சண்முகம் கூட்டிய எதிர்ப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இபிஎஸ் தலைமையில் இரண்டு சட்டசபை தேர்தல்களில் தோல்வியை தழுவி விட்டதால் இனி கட்சியை தாங்களே வழிநடத்துவது என்றும், இபிஎஸ் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தினர்.இந்த கருத்து மோதல்கள் காரணமாக, கட்சியின் சட்டசபை குழு தலைவர் கூட இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இபிஎஸ் மீண்டும் குழு தலைவர் ஆவதற்கு சிவி சண்முகம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அடுத்த கட்டம் பற்றி முடிவு செய்வதற்காக, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தன் வீட்டில் கூட்டி இபிஎஸ் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் 15 எம்எல்ஏக்கள் மற்றும் 16 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்களும், மேலும் சிலரும், இன்று மதியம் எம்ஆர்சி நகரில் வேலுமணி மற்றும் சிவி சண்முகத்தை சந்தித்து பேசினர். சிவி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் சிலர், விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாகவும், அவரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.நிலவும் சிக்கல்களுக்கு எந்த தீர்வும் ஏற்படாவிட்டால், நாளை எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்கும் விழாவில், மோதல் வெட்டவெளிச்சமாகும் என்று கட்சியினர் அஞ்சுகின்றனர்.