×

சாலையில் திடீர் பள்ளம் - 2 பிரிவுகளில் வழக்கு

 

சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் தொடர்பாக 281, 125A ஆகிய இரு பிரிவுகளின் கீழ் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் கடந்த 17 ஆம் தேதி திடீரென பெரிய பள்ளம் உண்டாகியுள்ளது. அப்போது சிக்னலில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்று பள்ளத்தில் திடீரென கவிழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் ஐந்து பேர் பயணித்த நிலையில், அனைவரும் பள்ளத்தில் சிக்கினர். உடனடியாக கிரேன் உதவியுடன் பள்ளத்தில் விழுந்த காரை வெளியே எடுத்த போலீசார், காருக்குள் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டனர். சாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மெட்ரோ பணிகள் காரணமாக பள்ளம் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதனை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது. சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே பள்ளம் உண்டானதாக மெட்ரோ தரப்பு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் தொடர்பாக 281, 125A ஆகிய இரு பிரிவுகளின் கீழ் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான காரின் ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.