அரசியலில் திடீர் பரபரப்பு..! மகன் துரையை காப்பாற்ற தவெக பக்கம் தாவும் வைகோ - ரகசியத்தை உடைத்த மல்லை சத்யா!
சென்னை எழும்பூரில் திராவிட வெற்றிக் கழகம் (DVK) கட்சியின் தலைவர் மல்லை சத்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியவை, "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெற்றிப் பெற்று திராவிட மாடல் 2.O ஆட்சி நடத்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தான் ஒரு திராவிட இயக்கத்தை சார்ந்தவன் என வைகோ பல முறை கூறியுள்ளார். ஆனால் அவர் இப்போது 99.9 சதவீதம் திமுக கூட்டணியில் இருந்து விலகி போய் விட்டார். மதிமுக தற்போது மகன் திமுக-வாக மாறிவிட்டது.
திமுகவின் கூட்டணி கட்சிகளால் கூட அதன் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது. வைகோ இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றபோது, தன் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் விசில் சின்னத்துக்கு தான் வாக்களித்தார்கள் என துரை வைகோ கூறினார். இதை வைத்து பார்க்கையில் திமுக கூட்டணி எந்த அளவிற்கு உள்ளது என தெரிகிறது.
கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பு முழுமையாக இல்லை. மக்களின் அதிருப்தி இல்லாமல், எதிர்ப்பு இல்லாமல் நடைபெற்ற ஒரு ஆட்சி முற்றுப்பெற்று விட்டது என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் திராவிட இயக்கத்தின் வழிவந்தவன் என்று சொல்லும் மதிமுக, திமுக-விடம் இருந்து விலகி செல்வதை பார்க்க முடிகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையை பிடித்து, உங்களுக்கு எப்படி உறுதுணையாக இருந்தேனோ அதேபோல மு.க. ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று பேசிய வைகோ, இப்போது தவெக பக்கம் தாவி கொண்டிருக்கிறார். தன்னுடைய மகனை காப்பாற்றுவதற்காக மதிமுகவை அவர் தற்போது மகன் திமுக-வாக மாறிவிட்டார்.
இவர்கள் யார் விலகி சென்றாலும் திமுக இயங்கி கொண்டுதான் இருக்கும். கூட்டணி கட்சிகள் வெளியேறியதால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. திமுக ஒரு பீனிக்ஸ் பறவை போல், அது மீண்டும் எழும். தமிழகத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் 10-இல் நான்கு தவெக-வினர் ஈடுபடுவதாக செய்திகள் மூலம் தெரிகிறது" என்றார்.