×

2வது தளத்தில் திடீர் விரிசல்-  உணவை அப்படியே வைத்துவிட்டு திமுகவினர் ஓட்டம்

 

புதுக்கோட்டையில் திமுக கூட்டம் நடைபெற்ற மண்டபத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள உணவு உண்ணும் கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த மார்பில் டைல்ஸில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதை கண்டதும் உணவு உண்டு கொண்டிருந்த திமுக நிர்வாகிகள் அலறி அடித்துக் கொண்டு  மண்டபத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தின் முதல் தளத்தில் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு சார்பில் கருத்தரங்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கூட்டம் முடிந்தவுடன் முக்கிய நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர். பின்னர் அந்த மண்டபத்தின் இரண்டாவது தளத்தில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உணவு பரிமாறப்பட்டு வந்த நிலையில் அந்த தளத்தில் அமைப்பட்டிருந்த மார்பில் டைல்ஸ் அதிக வெப்பம் காரணமாக விரிசல் ஏற்பட்டதால் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகிகள் உடனடியாக அலறி அடித்து வெளியேறினர். இதனைப் பார்த்து மண்டபத்திற்கு கீழ் தளத்தில் இருந்தவர்களும் மண்டபத்தைச் சுற்றி வாகனத்தை நிறுத்தியவர்களும் வாகனங்களையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் திமுக நிர்வாகிகள் இது மார்பிள் டைல்ஸில் ஏற்பட்ட விரிசல் தான் வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் மண்டபத்திற்குள் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபம் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதிக்கு சொந்தமான மண்டபம் என்பது குறிப்பிடத்தக்கது.