×

#BREAKING நாளை முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்

 

சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்கத்தில் நாளை மறுநாள்( ஜூன்1) முதல் புதிய காலஅட்டவணை அமல்படுத்தபட உள்ளது.

தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம் சார்பில், சென்னை – தாம்பரம் – செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் தினமும் 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், ஒன்பது லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். பயணியரின் பல்வேறு கோரிக்கைளை ஏற்று ஆண்டுதோறும், புதிய காலஅட்டவணை வெளியிடும். இந்நிலையில், சென்னை – தாம்பரம், செங்கலப்டு வழித்தடத்தில் நாளை முதல் புதிய காலஅட்டவணை அமல்படுத்த உள்ளது. தற்போது இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவையை குறைக்கவும் இல்லை, அதிகரிக்கவும் இல்லை. ஆனால், ரயில்களின் இயக்கும் நேரத்தை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம் என்ன?

இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை – தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் தடத்தில், புதிய காலஅட்டவணைப்படி, அலுவலக நாட்களில், 212 மின்சார ரயில்களும், விடுமுறை நாட்களில் 190க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படும். பயணியர் கோரிக்கைக்கு ஏற்ப, ரயில்களின் இயக்க நேரத்தில் மட்டுமே மாற்றம் செய்துள்ளோம். அதாவது, அலுவலக நேரங்களில் தற்போது ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை இருக்கிறது. இது மூன்று முதல் நான்கு நிமிடங்களில் ஒரு ரயில் சேவை கிடைக்கும் வகையில் மாற்றம் செய்துள்ளோம். இதேபோல், அலுவலக நேரம் அல்லாத மற்ற நேரங்களில் தற்போது 10 முதல் 25 நிமிடங்கள் இடைவெளியில் ஒரு ரயில் இருக்கிறது. இது, 15 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்சேவை கிடைக்க புதிய மாற்றம் செய்துள்ளோம். சென்னை கோட்டத்தில் நடக்கும் கட்டமைப்பு பணிகள் முடியும்போது, கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பயணியர் ஏமாற்றம்

இது குறித்து, ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சென்னை புறநகரில் மின்சார ரயில்களின் தேவை பல மடங்கு அதிகரித்து வருகிறது. போதிய மின்சார ரயில்கள் இல்லாததால், அலுவலக நேரங்களில் பயணியர் நெரிசலில் சிக்கி பயணம் செய்து வருகின்றனர். புதிய காலஅட்டவனையில் கூடுதல் ரயில்கள் இல்லாதது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பராமரிப்பு பணியை காரணம் காட்டி, ரத்து செய்யப்பட்ட, 30க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேணடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.