×

டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார் சுபான்ஷு சுக்லா

 

டிராகன் விண்கலத்தில் இருந்து இந்தியாவின் சுபான்ஷ சுக்லா வெளியே வந்தார்.

இஸ்ரோ, நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ‘அக்ஸியம் - 4’ திட்டத்தை முன்னெடுத்தன. அதன்படி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா , முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரி வீரர் திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள், கடந்த மாதம் 25ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட்டில் ஜூன் 25ம்தேதி இந்திய நேரப்படி நண்பகல் 12.02 மணிக்கு விண்ணில் பாய்ந்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம், 28 மணி நேரம் சுற்றுப்பாதையில் பயணித்து ஜூன் 26ம் தேதி மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. ஆக்ஸியம் - 4 குழுவில் உள்ள நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று( ஜூலை 14) சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப புறப்பட்டனர். மாலை 3 மணியளவில் டிராகன் விண்கலம் காலிப்ஃபோர்னியாக கடற்கரையில் இறங்கியது. டிராகன் விண்கலத்தின் கதவு திறக்கப்பட்டு விண்வெளி நாயகன் சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் பாதுகாப்பாக வெளியே வந்தனர்.  இதன்மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று விட்டு பத்திரமாக திரும்பிய முதல் இந்தியராக சுபான்ஷூ சுக்லா சாதனை படைத்துள்ளார்.