"என்னை யாரும் வன்கொடுமை செய்யவில்லை! நான் பொய் புகார் அளித்தேன்”- மாணவி பரபரப்பு வாக்குமூலம்
திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவி, ப்ராஜெக்ட் பணிக்காக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சென்னைக்கு வந்துள்ளார். தொடர்ந்து, அவர் அடையாறு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ப்ராஜெக்ட் பணிகளை செய்து வந்துள்ளார். சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே அவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத இரு வெவ்வேறு எண்களில் இருந்து மர்ம நபர்கள், மார்பிங் செய்யப்பட்ட அவரது புகைப்படங்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளனர். அத்துடன், அந்த புகைப்படங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.இந்த சூழலில், கடந்த மார்ச் 9-ம் தேதி அன்று, அந்த மாணவி வெளியே செல்வதற்காக வாடகை டாக்சியை புக் செய்து காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர், மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றி அவர் மீது மயக்கப் பொடியை வீசியுள்ளனர். இதில் மாணவி காரிலேயே மயங்கியுள்ளார். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அடையாறில் உள்ள வேறொரு பகுதியில் மாணவியை அந்த கும்பல் இறக்கி விட்டுச் சென்றுள்ளது. உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த அந்த மாணவி, கடந்த மார்ச் 10-ம் தேதி அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து கல்லூரி மாணவி சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் தீவிர விசாரணையில் மன அழுத்தத்தில் அப்படி புகார் அளித்ததாக அம்மாணவி கூறியுள்ளார். படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி தவறான தகவல் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது.