×

"கல்லூரி மாணவர் மணிகண்டன், வியாபாரி உலகநாதன்  குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம்" - ஈபிஎஸ் கோரிக்கை!!

 

மணிகண்டன் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக காவல் துறையிலேயே பணிபுரியும் ஒரு சிலரின் செயல்பாடுகள் உள்ளன.  ஏற்கனவே எனது முந்தைய அறிக்கையில் ஒரு சில முக்கிய நிகழ்வுகளை நான் விரிவாக கூறியுள்ளேன்.  கடந்த ஒரு சில நாட்களில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை நான் இங்கே குறிப்பிடுகிறேன். 

மதுரையில் சினிமா பார்த்துவிட்டு உறவினர்களுடன் வந்த ஒரு இளம்பெண்ணை மிரட்டி அழைத்து சென்ற காவலர் ஒருவர்  பாலியல் பலாத்காரம் செய்ததோடு பணத்தையும் பறித்து சென்றதாக காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலக அலுவலகத்தில் கடந்த 4ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ராணுவ அணிவகுப்பு மைதானம் அருகே நடந்து சென்ற ராணுவ வீரரை திருடர்கள் வழிமறித்து கைபேசியும் ,ஆயிரம் ரூபாயும் பறித்து சென்றனர். வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வந்தன.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பெட்டிக்கடை வைத்து வியாபாரி உலகநாதன் ரெய்டுக்கு வந்த காவல்துறையிடம் வாக்குவாதம் செய்ததாகவும், அதனால் அவர் தாக்கப்பட்டு வியாபாரி உலகநாதன் உயிரிழந்ததாகவும் ,இதனால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய கோரி, குடும்பத்தினரும் , பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகசெய்திகள் வெளியாகின.

அத்துடன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே 21 வயதான மணிகண்டன் என்ற கல்லூரி மாணவன் போலீசாரால்  விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீட்டில் மர்மமான முறையில் இறந்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணத்திலும் மற்றும் வியாபாரி உலகநாதன் மரணத்திலும் காவல்துறையை சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால்,  வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விடியா அரசின் ஆட்சியில்  பெண்களும், பொதுமக்களும் சுதந்திரமாக நடமாட இயலவில்லை. தங்கள் கைகளில் இருக்கும் அதிகாரம் நிரந்தரமானது என்ற இருமாப்பில் இந்த ஆட்சியாளர்கள் ,சமூக விரோதிகளுக்கும் ,காவல்துறையில் உள்ள ஒரு சிலருக்கு ஆதரவாகவும், ஒரு சிலரை பழிவாங்கும் ஆட்சி நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது , சட்டம் ஒழுங்கு சீர்குலைவை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  அதோடு இதே நிலை தொடர்ந்தால் மக்கள் வீதிகளில் வந்து போராடும் நிலை உருவாகும்.  காவல்துறையில் நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர்.  அவர்களுக்கு சரியான பணியிடங்களை வழங்குங்கள்.  சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துங்கள்.  தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.