தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
அந்தியூர் அருகே தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி தேர்வரையில் மாதாந்திர தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் - சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு ஹரிணி( 13 ), ஹரிஷ் தேவசேனாதிபதி ( 11) என ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். சாந்தி அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதர்ஸ் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் மகள் ஹரணி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஹரிணி உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். தொடர்ந்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து இன்று உடல்நிலை சரியானதை அடுத்து தனது தாயாரோடு பள்ளிக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே பள்ளியில் வழக்கம் போல மாணவ, மாணவிகள் மாதாந்திர தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது சிறுமி ஹரிணி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட வகுப்பு ஆசிரியர் கொடுத்த தகவலின் பெயரில் பள்ளி நிர்வாகத்தினர் வாகனம் மூலமாக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி ஹரிணி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடல் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.