×

மரம் முறிந்து விழுந்து மாணவி மரணம் - ஜவாஹிருல்லா இரங்கல்

 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம், உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சார்ந்த சுஷ்மிதாசென் என்ற 15 வயது மாணவி மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த செல்வி.இராஜேஸ்வரி என்ற மாணவி ஆகிய இருவர் மீதும் நேற்று (29-8-2023) மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகிலுள்ள மரம் வேறோடு சாய்து விழுந்ததில் செல்வி.சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .  மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த இராஜேஸ்வரி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்-1 கிராமத்தில் நேற்று (29-8-2023) மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையில் பள்ளியின் அருகிலுள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில்  தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவி செல்வி சுஷ்மிதா (வயது 15) உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்

மேலும் இவ்விபத்தில் மற்றொரு மாணவி ராஜேஸ்வரி படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.



இவ்விபத்தில் இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதற்கும் காயமடைந்த மாணவிக்கு ரூ 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களது மகள் சுஷ்மிதாவை இழந்து நிற்கும் அவரது பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள், ஊர் மக்கள், உடன் படித்த மாணவியர், அவரது ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவி இராஜேஸ்வரி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார் .