ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து துடிதுடித்து உயிரிழந்த மாணவன்
தஞ்சாவூரில் ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து 4-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் விளார் சாலை அண்ணாநகர் முதல்தெருவைச் சேர்ந்தவர் குமார். பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோஜா. இவர்களது மகன் 9 வயது சீனிவாசன் தஞ்சாவூர் கல்லுகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிக்கு தினமும் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த வினோத் என்பவரின் ஆட்டோவில் செல்வது வழக்கம். அதே போல் இன்று மாலை பள்ளி முடிந்ததும், வீட்டுக்கு ஆட்டோவில் சீனிவாசன் சென்றான்.
ஆட்டோவில் 7 மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர். அப்போது ஆட்டோ நாஞ்சிக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சீனிவாசன் தவறி வெளியே விழுந்துள்ளான். இதில் தலையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் சீனிவாசனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சீனிவாசன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சீனிவாசனின் உடல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரான வினோத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.