மாணவர் அமுதன் கொலையில் திருப்பம்: போதைப்பொருள் புகாரா? போன் பறிப்பு மோதலா? காவல் துறை விசாரணை!
கள்ளக்குறிச்சி சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன். இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்காக கல்லூரி விடுதியில் அவர் தங்கியிருந்தார். அவருடன் ஸ்ரீமன் (19) என்ற மாணவன் உட்பட 4 பேர் தங்கியிருந்தனர்.
இதனிடையே, விடுதியில் சமையல் வேலை பார்க்கும் வட மாநிலத்தவர்களுடன் அமுதனுக்கு அண்மையில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, அவர் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், இதனால் அமுதனும், ஸ்ரீமனும் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறைக்கு சென்று தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நேற்று முன்தினம் அமுதன், ஸ்ரீமன் ஆகியோர் கல்லூரிக்கு செலவதற்காக மலுச்சிம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதே கல்லூரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து அவர்களை வழிமறித்துள்ளனர்.
பின்னர், தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அமுதனையும், ஸ்ரீமனையும் அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஸ்ரீமன் படுகாயங்களுடன் தப்பியோடியதாக தெரிகிறது.
தொடர்ந்து, அமுதனை மட்டும் பைக்கில் ஏற்றிய அவர்கள், விடுதி அறைக்கு கூட்டிச் சென்று, அங்கு வைத்தும் அவரை மூர்க்கமாக தாக்கியுள்ளனர். இதில் அமுதன் மயங்கி விழுந்துள்ளார். மதியம் சாப்பிட விடுதிக்கு வந்த மாணவர்கள், ரத்த வெள்ளத்தில் அமுதன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து, அமுதனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அமுதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த அமுதனின் பெற்றோர், அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். விடுதியில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு அமுதன் கூறியதாகவும், இதுகுறித்து தெரியவந்த சம்பந்தப்பட்ட மாணவர்கள் அமுதனை அடித்துக் கொலை செய்திருப்பதாகவும் அவரது பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்த கொலை வழக்கு தொடர்பாக கல்லூரி மாணவர்கள் ஆராமுதன், அரவிந்த், சிவரோகித், மணி பாலு, 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேறு மாதிரியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பு கூறுகையில், "கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு கடந்த 9-ம் தேதி சில மாணவர்கள் முகமூடி அணிந்து சென்றுள்ளனர்.
பின்னர் அங்குள்ள மாணவர்களை மிரட்டி, விலை உயர்ந்த செல்ஃபோன்களை பறித்து சென்றுள்ளனர். இந்த கும்பலில் அமுதனும் சென்றதாக தெரிகிறது.
அமுதனின் முகமூடி லேசாக விலகியதால், அவரை மற்ற மாணவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதன் காரணமாக, அவர்கள் அமுதனை தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என போலீஸ் தரப்பு கூறுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயா, டீன் மகுடிஸ்வரன் , ஆனந்தமூர்த்தி, பி.ஆர்.ஓ. ரவிக்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் கூறுகையில், "எங்கள் கல்லூரி மாணவர் அமுதன் இறந்திருக்கிறார். அவரது இறப்பு வேதனை அளிக்கிறது. மாணவர் அமுதனுக்கும், விடுதி சமையல்காரர் மனோஜ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனோஜை அமுதன் தாக்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக, மாணவன் அமுதனை நாங்கள் சஸ்பெண்ட் செய்தோம். இதுதொடர்பாக அமுதனின் பெற்றோரையும் வரவழைத்து நாங்கள் கூறினோம்.
மற்றபடி, கல்லூரியிலோ, விடுதியிலோ எந்த போதைப்பொருள் நடமாட்டமும் இல்லை" எனத் தெரிவித்தனர்.