×

"65 கிமீ வேகத்தில் சூறைக்காற்று... மீனவர்களே கடலுக்கு செல்லாதீர்கள்"

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அது தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா-வட தமிழகம் அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

காற்றை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். சில சமயங்களில் 65 கிமீ வரை கூட காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு-மத்திய வங்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வங்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கோவா-தெற்கே கிழக்கு மத்திய அரபிக்கடலில் உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.