தெரு நாய் தொல்லை... அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு
தமிழகத்தில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில், தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
அதன்படி, சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் நாய்களுக்கு அதிக எண்ணிக்கையில் கருத்தடை மேற்கொள்ளும் வகையில் உட்கடமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக கிராமங்களில் உள்ள கால்நடை கிளை நிலையங்களில் கருத்தடை வசதிகளை ஏற்படுத்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். தற்போது சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நாய்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும், நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும், நோய்வாய்ப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் வகையில் காப்பகங்களை உருவாக்க வேண்டும், கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள வேண்டும், இதன்படி அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.