×

மக்களே உஷார்..!! தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு! 4 மாவட்டங்களில் எகிறிய பாதிப்பு..!!

 

டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள், மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. ஆண்டு முழுதும் பரவலாக பாதிப்பு இருந்தாலும், ஜூன் மாத்திற்கு பின், சற்று அதிகரிக்க தொடங்குகிறது.

அதன்படி, இந்த ஆண்டில் இது வரை, 9,250 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 912 ஆக இருந்த கோவையில், தற்போது 1,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருச்சியில், 174 ஆக இருந்த பாதிப்பு, 319; சேலத்தில், 103ல் இருந்து 163; திருப்பூரில், 252ல் இருந்து 266 என, நான்கு மாவட்டங்களில், கடந்த ஆண்டுகளை விட, டெங்கு பாதிப்பு அதிகரித்து உள்ளது. அதேநேரம், சென்னையில் 2,154 ஆக இருந்த பாதிப்பு, 1,656 என குறைந்து இருப்பதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: தமிழகத்தில், இதே காலகட்டத்தில் 2024ம் ஆண்டு, 23,387 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டில் 10,611 பேர், இந்த ஆண்டில், 9,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட, பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தற்போது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த, கொசு ஒழிப்பு பணி, தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல் போன்ற டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.