×

“பொய் பிரசாரம் செய்வதிலேயே ஸ்டாலின் ஆர்வம்” - கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி

 

“நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் ஸ்டாலின் பரப்புரையில் குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால் ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டு தமிழக மக்களை திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதைத்தொடரந்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,””நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்” எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.

கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், “குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறீர்கள்.

தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஏப்ரல் 13) அந்த கடிதத்தை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார்.

மேலும், “உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான, தொடர்ச்சியான மற்றும் நேர்மறையான ஈடுபாடு மேற்கொள்வது அவசியமானதாகும். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும் தொடர்கிறார்கள்—மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்குவது, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பது மற்றும் தங்களை மட்டுமே விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்வது ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்போது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது வெளிப்புறத் தாக்கங்களுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரியான சூழல் அல்ல. பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார்ந்த (strategic) தேவையும் கூட.

சமையல் எண்ணெய் தேவையைக் காட்டிலும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியாதா? பருப்பு வகைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் விவசாயிகளின் நலன் முதலமைச்சர் ஸ்டாலினின் மனதில் இல்லை.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், புரதம் நிறைந்த பயிர்கள் வழியாக ‘ஊட்டச்சத்து பாதுகாப்பை’ உறுதி செய்யவும், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் ‘பொருளாதார நிலைத்தன்மையை’ அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார்.

நீர் அதிகம் தேவைப்படும் உபரிப் பயிர்களுக்குப் பதிலாக, இந்தியாவிற்கு உண்மையில் தேவைப்படும் அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் போது மட்டுமே உண்மையான உணவு இறையாண்மை சாத்தியமாகும்.

மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார். அது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள். ஆனால், ஸ்டாலின் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார் — ஏனெனில், தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்களின் நோக்கம்.”என தெரிவித்துள்ளார்.