×

லண்டனில் இருந்தபடி திமுக எம்.பி.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை..!

 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல், தொகுதி மறுவரையறை மசோதா, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 04- ஆம் தேதி தனது பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றிருந்தார். தற்போது அங்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம், காணொளி வாயிலாக இன்று (ஜூலை 16) நடைபெற்றது.

லண்டனில் இருந்து காணொளி வாயிலாகக் கலந்து கொண்ட திமுகவின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், டி.எம்.செல்வகணபதி, கிரிராஜன், வில்சன், கணபதி ராஜ்குமார், ஆ.ராசா, எஸ்.ஆர்.சிவலிங்கம், திருச்சி சிவா, முரசொலி, அண்ணாதுரை, மலையரசன், ஜெகத்ரட்சகன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்களின் செயல்பாடுகள் குறித்தும், எழுப்ப வேண்டிய விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இது என்பதால் திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவிரி இறுதித் தீர்ப்பின்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறக்காமல் முரண்டு பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் சட்டவிரோதச் செயல்பாடுகளாலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் “தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறந்து விட முடியாது” எனக் கர்நாடகம் தொடர்ந்து வாதிட்டு வரும் சூழல் ஏற்பட்டு, இம்முறை ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்காமல் நம் விவசாயப் பெருங்குடி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதை இக்கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தவரை, மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிகள் வெற்றிபெறவிடாமல் தமிழ்நாடு வெற்றிகரமாகத் தடுத்துள்ளது.

மேகதாது அணையின் 'விரிவான திட்ட அறிக்கையை' காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்காமல் திருப்பி அனுப்பவும், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பட்டியலில் இருந்தே நீக்கவும் வைத்து, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாத்து, காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்ட முயன்ற கர்நாடகத்தின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தவர்தான் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

அதேநேரத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படி 'காவிரி நடுவர் மன்றம்' கண்டாரோ, அதேபோல் மேகதாது அணைப் பிரச்சனைக்கும் தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஆட்சியில் இருந்தபோதே கோரிக்கை வைத்தார் அப்போதைய முதல்வர். காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதே காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட முக்கியக் காரணமாகும்

இப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிரான அரசினர் தீர்மானம் முன்மொழியப்பட்டபோது, திமுக தலைவரின் அறிவுறுத்தலின்பேரில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,‘மேகதாது அணைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்ற திருத்தத் தீர்மானத்தை முன்மொழிந்து, அவ்வாறே அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தி.மு.க.வின் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என இக்கூட்டம் பதிவு செய்கிறது.

மேகதாது அணைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை எவ்வித தாமதமும் இன்றி கர்நாடக அரசு திறந்து விடுவதையும் ஒன்றிய அரசு உறுதி செய்திட வேண்டும் என மழைக்காலக் கூட்டத் தொடரில் வலியுறுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையிலும், மாநில உரிமைகளைக் காக்கின்ற வகையிலும், அரசியல் சட்டத்தின் மாண்புக்காகவும், விழுமியங்களுக்காகவும் எப்போதும் போல் குரல் கொடுக்கவும், அதையொட்டி வரும் அனைத்து விவகாரங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வாக திமுக எம்பிக்களின் குரல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒலித்திடும் என்று இக்கூட்டம் உறுதி செய்கிறது.' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.