அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்..!
அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில்,
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.என கடுமையாக சாடியுள்ளார். தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்த ஒருவரை, அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், முதலமைச்சர் விஜய் சினிமா ஆக்ஷன் பாணியில் தமிழ்நாட்டில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அவதூறு வழக்குகளுக்காகக் கைது செய்வதாக இருந்தால், தற்போதைய தவெக அரசின் அமைச்சர்கள் தினமும் பேசும் பேச்சுகளுக்கெல்லாம் எத்தனை பேரைக் கைது செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திருவைகுண்டம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த 'தூயசக்தி ஆட்சி', அனிதா ராதாகிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்று ஸ்டாலின் வினவியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் தினசரி நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல், அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரைபேரம் மூலம் இணைத்துக் கொண்டு நாற்காலியைத் தக்க வைக்கவே இந்த அரசு முயல்கிறது என்றும், விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கும் முதலமைச்சரின் இந்த "ஆணவம் அழிவிற்கே வழிவகுக்கும்" என்றும் அவர் தனது பதிவில் காட்டமாக எச்சரித்துள்ளார்.