சாலையில் பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்ட எஸ்.எஸ்.ஐ அடித்து கொலை..!!
தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில் குமார் (வயது 55). தீபாவளி தினமான நேற்று (நவம்பர் 8), வழக்கம்போல் தனது பணியை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்த போது, தேனி சமதர்மபுரம் பகுதியில், சில இளைஞர்கள் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அந்த இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வழியாக சென்ற எஸ்.எஸ்.ஐ செந்தில் குமார், பட்டாசு வெடித்து கொண்டிருந்த இளைஞர்களிடம், சாலையை விட்டு வேறு இடத்திற்குச் சென்று பட்டாசு வெடிக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால், அதனை பொருட்படுத்ததாக இளைஞர்கள், தொடர்ந்து சாலையிலேயே பட்டாசு வெடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இளைஞர்கள் சாலையில் பட்டாசு வெடிப்பது குறித்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செந்தில் குமார் புகார் அளித்துள்ளார். இதனைக் கண்ட அந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து செந்திலை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் செந்தில் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, செந்திலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தேனி காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 9) காலை, சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈடுபட்டதாக கூறப்படும் 3 பேரை தேனி காவல்துறையினர் பிடித்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் பட்டாசு வெடித்தவர்களை தட்டிக் கேட்ட எஸ்.எஸ்.ஐ. அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.