×

ஸ்ரீவில்லிபுத்தூர் : தவெக மாநாட்டிற்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..!

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக  மதுரை மாநாட்டிற்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 
தமிழக வெற்றிக் கழகத்தின்  2வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் நாளை (ஆக. 21ம் தேதி) நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்காக அங்கு 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  5 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டு மேடை மற்றும் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில்  இருக்கைகள், மின் விளக்குகள், பந்தல் அமைப்பது, அலங்கார வளைவுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சிலல் நடந்து வருகின்றன.  மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக 5 லட்சம் லிட்டர் குடிநீர்  1 லிட்டர் என்கிற அளவில் பாட்டில்களாக தயார் செய்யப்பட்டுள்ளன.   

மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் அனைத்து பகுதிகளில்  இருந்தும் லட்சக்கணக்கான தவெக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  அந்தந்தப் பகுதிகளில் மாநாட்டிற்காக ஆயத்தமாகி வரும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  மாநாட்டை வரவேற்று பேனர்கள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.  அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம் கரிசல் குளத்தில் மாநாட்டுக்கு பேனர் வைக்கும் பணியில் தவெக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அப்படி, மதுரை மாநாட்டை வரவேற்று  பேனர் ஒன்றை தவெகவை சேர்ந்த இளைஞர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிந்தபோது,  பேனர் வைவைத்து கட்டுவதற்கான  கம்பி ஒன்றை கல்லூரி மாணவர் காளீஸ்வரன் (19) என்பவர் எடுத்து வந்தார். எதிர்பாராத விதமாக கம்பி மீது மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே காளீஸ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேனர் வைக்க முயன்றபோது கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.