திமுக ஆட்சியில் பள்ளிக்கு ஒப்புதல் வழங்க பணம் கேட்டனர்! திமுகவின் மிரட்டல்களுக்கு அஞ்ச போவதில்லை - ஸ்ரீதர் வேம்பு
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா கூட லஞ்சம் இல்லாமல் அனுமதி தேடி வந்ததாக பெரும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில், “மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் தேனியில் பள்ளி நடத்தியதால் திமுக ஆட்சியின்போது துன்புறுத்தப்பட்டோம். லஞ்சம் கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்ததால் கடைசி வரை அங்கீகாரம் பெறவே இல்லை. தென்காசியில் தேசிய ட்திறந்தநிலை பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்க திமுக அரசு லஞ்சம் எதிர்பார்த்தது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா கூட லஞ்சம் இல்லாமல் அனுமதி கொடுத்தனர். எந்தவொரு ஒப்புதலுக்காகவும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று தற்போதைய அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள். இதற்கு முன்பு நாங்கள் அனுபவித்த துன்பங்களுக்குப் பிறகு, இதை நான் பொதுவெளியில் பாராட்ட வேண்டும்.
நான் ஒரு த.வெ.க.வின் கைக்கூலி அல்லது சங்கி அல்லது வேறு எதுவாகவும் என்னை தி.மு.க.வினர் நினைத்தால் பரவாயில்லை. தி.மு.க.வினரின் இழிவான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நான் பணிந்துவிடுவேன் என்று நினைக்கிறார்கள். தி.மு.க.வினர் போன்று நான் வம்சாவழிப் பணக்காரர் இல்லை, நான் ஏதுமில்லாமல் வளர்ந்தேன். தமிழ் வழிப் பள்ளிகளில் படித்தேன். தி.மு.க.வினரின் தாக்குதல்களால் நான் அஞ்சமாட்டேன். நான் மரணத்திற்கு அஞ்சாதவன், தி.மு.க.வுக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்? தி.மு.க.வினருக்கு சிறிதளவாவது மனசாட்சி இருந்தால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாம்” என்றார்.