×

ராகிங் புகாரளித்த மாணவியை செருப்பால் அடித்த சீனியர்- மயங்கி விழுந்த மாணவி

 

ராகிங் புகார் அளித்த முதலாம் ஆண்டு மாணவியை மாணவன் ஒருவன் செருப்பால் அடித்து தாக்கிய சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.இந்த நிலையில் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாற்று பிரிவில் பயிலும் (கிருபாகரன்) என்ற மாணவன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை ரேக்கிங் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி சம்பந்தப்பட்ட துறை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் ஒரு வாரம் ஆகியும் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் இருந்து வந்துள்ளனர்.

காவல்நிலத்தில் புகார் கொடுக்கப்பட்ட விஷயம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவன் கிருபாகரனுக்கு தெரியவரவே அவரது சக நண்பர்களை அழைத்துக் கொண்டுவந்து கல்லூரிக்கு வந்து முதலாம் ஆண்டு மாணவி மற்றும் அவரது சகோதரரை தகாத வார்த்தையில் திட்டியும் செருப்பால் அடித்தும் தாக்கி உள்ளார். அப்பொழுது மாணவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த மாணவி அங்கு மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகமும் துவாக்குடி போலீஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.