×

இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் செயல்: ப.சிதம்பரம் கண்டனம்!

 
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

ஜூலை 13 அன்று ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலைத் தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது. அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி ‘குறள்’ பொறிக்கப்பட்டிருந்தது என்பதுதான் அதிர்ச்சிச் செய்தி. ‘குறள் 944’ என்று பொறிக்கப்பட்ட ‘குறள்’ திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அதுபோன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரிய வருகிறது.

குறள் 123-லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல். காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல். போலிச் சித்திரம், போலிக் குறள்.. இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்​து​வர் தின விழா நடந்​தது. சிறப்​பாக சேவையாற்றிய 50 மருத்​து​வர்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேட​யங்​களை வழங்கி கவுர​வித்​தார். அந்த கேட​யங்​களில் திருக்​குறள் அச்​சிடப்​பட்​டிருந்​தது. அது​தான் தற்​போது பெரும் சர்ச்​சை​யாகி​யுள்​ளது. கேட​யத்​தில் இடம்பெற்​றிருப்​பது திருக்​குறளே இல்லை என்று தமிழ் ஆர்​வலர்​கள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றனர். இந்த விவ​காரம் சர்ச்​சைக்​குள்​ளான நிலை​யில், 50 மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களை திரும்ப பெற்​று, திருக்​குறளை திருத்​தம் செய்து சில தினங்​களில் மீண்​டும் வழங்​கு​மாறு ஆளுநர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.