KFC-யில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்: உணவகக் கிடங்கிற்கு உணவுப் பாதுகாப்புத் துறை சீல்!
மங்களூருவில் உள்ள KFC விற்பனை நிலையத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதாவது, கெட்டுப்போன உணவுப் பொருளை விற்பனை செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி பிரவீன் தலைமையிலான அதிகாரிகள்,கே.எஸ். ராவ் சாலைக்கு அருகிலுள்ள சிட்டி சென்டர் மாலில் அமைந்துள்ள அந்தக் கடையில் சனிக்கிழமையன்று சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது சமையலறை, சேமிப்புக் கிடங்கு மற்றும் குளிர்பதனப் பகுதிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறையினர் அந்த விற்பனை நிலையத்தின் கிடங்கிற்கு சீல் வைத்தனர். மேலும், உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு
அனுப்பப்பட்டன. ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சர் யூ.டி. காதரின் ((U. T. Khader )) அலுவலகம் வழங்கிய தகவலின்படி, அந்த விற்பனையகத்தில் இருந்து ஆன்லைனில் வாங்கிய சிக்கன் பெரி பெரி கால்கள் கெட்டுப்போனதாகவும், சுவையற்றதாகவும் இருந்ததாக வாடிக்கையாளர், அமைச்சரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், புகாருக்குள்ளான KFC விற்பனை நிலைய குளிர்பதனக் கிடங்கிற்குள் நுழைந்தபோது, துர்நாற்றம் வீசியது. உடனடியாக தயாரிக்கப்படும் உணவுகளுக்குப் பயன்படுத்தப்படும் சிக்கன் உட்பட, பல்வேறு வகையான சிக்கன்கள் அந்தக் குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் அந்த சிக்கன் மாதிரிகளை எடுத்து, மைசூரில் உள்ள அரசு ஆய்வகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். கே.எஃப்.சி விற்பனையகப் பணியாளர்கள், சிக்கன்களை அப்புறப்படுத்தவும், குளிர்பதனக் கிடங்கைச் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டனர்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ், விற்பனை நிலையத்தை நிர்வகிக்கும் பணியாளர்களுக்கு ஓர் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அந்த அறிவிப்பில், உணவுப் பாதுகாப்புப் பணியாளர்களால் விசாரிக்கப்படும் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நியமிக்கப்பட்ட மாவட்ட அதிகாரியான கூடுதல் துணை ஆணையர் கே. ராஜு முன்னிலையில், ஆகஸ்ட் 17, திங்கட்கிழமை அன்று ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை மைசூரு நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆய்வை மேற்கொண்டதில், ரியோ மெரிடியன் ஹோட்டலில் இருந்து 9 கிலோ காலாவதியான சிக்கனையும், கிராண்ட் மெர்கூர் ஹோட்டலில் இருந்து 68 கிலோ சிக்கனையும், கியூ ஸ்டார் ஹோட்டலில் இருந்து 4 கிலோ காளான்களையும் பறிமுதல் செய்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேஎஃப்சி KFC நிறுவனம் வெளியிட்ட பதிலில், "ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக, உணவுப் பாதுகாப்பு, தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதில் கேஎஃப்சி உறுதியாக உள்ளது. தற்போது, பரவி வரும் தகவல்கள் உண்மை அல்ல. வாடிக்கையாளர்களுக்குத் தரமான உணவை வழங்குவதற்காக, நாடு முழுவதும் உள்ள நம்பகமான விநியோகஸ்தர்களிடமிருந்து உயர்தரமான கோழி இறைச்சியை நாங்கள் பெறுகிறோம். அத்துடன் FSSAI வழிகாட்டுதல்கள் மற்றும் சில உலகளாவிய தரநிலைகளையும் நாங்கள் தீவிரமாகப் பின்பற்றுகிறோம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் கூறும்போது, நாங்கள் பரிமாறும் மற்றும் சேமித்து வைக்கும் கோழி இறைச்சிகள் உரிய விதிமுறைகளின்படியே கையாளப்படுகிறது. அது ஒவ்வொரு நாளும் உணவகத்திலேயே சமைக்கப்படுகிறது. மேலும், விநியோகஸ்தரின் பண்ணையிலிருந்து வாடிக்கையாளருக்கு பரிமாறும் வரை, இறைச்சியின் ஒவ்வொரு துண்டும் பல கடுமையான தர மற்றும் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம். அத்துடன், பொருந்தக்கூடிய சட்ட மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். KFC-யின் கடுமையான சமையலறை நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள், சமையலறையைப் பார்வையிட (kitchen tour) உணவக மேலாளரைத் தொடர்புகொள்ளலாம்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.