×

ஆன்மீகம் அறிவோம் : வெளிநாட்டு கனவை நிஜமாக்கும் சிவன் கோவில்..!

 

சென்னையில் இருந்து 45 கி.மீ., தூரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள படூர் என்று ஊரில் தான் உள்ளது மணிகண்டீஸ்வரர் ஆலயம். பல்லவ, சோழ மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட இந்த ஆலயம் சைவ, வைணவர்களுக்கு முக்கியமானதாக விளங்கியது. பின்னர் அந்நியப் படையெடுப்பின் போது சேதப்படுத்தப்பட்ட இக்கோவில் 1992 ம் ஆண்டில் கிருஷ்ணவேணி அம்மையார் என்ற அடியாரின் கடுமையான முயற்சியால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

கிழக்கு நோக்கி அமைந்த இக்கோவில் மூன்று பகுதிகளை உடையதாகும். இடதுபுறம் ஐயப்பன் கோவிலும், வலது புறத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலும் அமைந்திருக்க, நடுவில் அமைந்துள்ளது மணிகண்டீஸ்வரர் ஆலயம். மகா மண்டபத்தில் மரகதவல்லி சன்னதியும், கருவறையின் முன் விநாயகர், முருகன் சன்னதிகளும், கருவறையைச் சுற்றில் விநாயகர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சோழர் கால சண்டிகேஸ்வரர் ஆகியோரின் திருமேனிகள் காணப்படுகின்றன. இது தவிர பைரவர், பவானி அம்மன், சூரியன், நந்திதேவர், ஜலகண்டேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்குள்ள ஸ்ரீநிவாசப் பெருமான் மகாலட்சுமியை தனது திருமார்பிற்கு பதிலாக தலைமீது வைத்த நிலையிலும், சங்கு மற்றும் சக்கரங்களை திசை மாற்றி வைத்தும் காட்சி தருகிறார். இது போன்ற ஒரு அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. இங்கு பெருமாள் சன்னதிக்கு எதிரில் தன்வந்திரி பகவானுக்கும் சன்னதி உள்ளது. கொடி மரத்திற்கு அருகே வானத்தை பார்த்தபடி நந்தியோடு இருக்கும் ஜலகண்டேஸ்வரரையும் தரிசிக்க முடியும். இவரை பக்தர்கள் தங்களின் கைகளால் தொட்டு வணங்கலாம். இவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பழங்காலத்தில் துறைமுகமாக இருந்த இப்பகுதியில் அதிகமான படகுகள் நிறைந்த ஊராக இருந்தால் இப்பகுதி படகூர் என அழைக்கப்பட்டு, பிறகு கால காலப்போக்கில் படூர் என மாறியது. இக்கோவிலின் பிரதான தெய்வமாக விளங்குவது மணிகண்டீஸ்வரர். பழங்காலத்தில் சிறுகாளேஸ்வரமுடைய மகாதேவர், சிறுமண்ணீஸ்வரமுடைய மகாதேவர், திருகாரீஸ்வரமுடைய மகாதேவர் என பல பெயர்களில் இத்தல இறைவன் அழைக்கப்பட்டுள்ளார். இவரது கருவறைக்கு எதிரே தென்முகமாக மரகதவல்லி தாயார் நின்ற கோலத்தில் அபய வரத முத்திரையுடன் காட்சி அளிக்கிறாள். மணிகண்டீஸ்வரர் மற்றும் மரகதவல்லி தாயாரை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். வெளிநாடு செல்லும் விருப்பம் நிறைவேறும்.