×

பாடகி எஸ்.ஜானகியின் அஸ்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காவிரி ஆற்றில் கரைப்பு..!!

 

பாடகி எஸ்.ஜானகி மைசூரு டவுன் சரஸ்வதிபுரம் அருகே போகாதி பகுதியில் அமைந்துள்ள மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தின் பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி இரவு உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலுக்கு பொதுமக்கள், திரைப்பட பிரபலங்கள், நடிகர்- நடிகைகள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.ஜானகியின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அரசியில் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டை தாலுகாவை சேர்ந்த கனியனகுந்தி கிராமத்தின் அருகில் உள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் எஸ்.ஜானகியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று காலை எஸ்.ஜானகியின் அஸ்தி ஒரு பானையில் சேகரிக்கப்பட்டு, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா 'பச்சிமா வாகினி' என்ற இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு புரோகிதர்கள் மூலமாக வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.

பாடகி எஸ்.ஜானகியின் அஸ்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காவிரி ஆற்றில் அஸ்தி முறைப்படி கரைக்கப்பட்டது.