மதுபோதையில் வேலை செய்யும் சிறப்பு உதவி ஆய்வாளர்- வீடியோ வைரல்
திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) ஒருவர், மது போதையில் வாகன சோதனையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கலசப்பாக்கம் அடுத்த மசார் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடனை வசூலிக்க வந்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேர், ஏழுமலையை மிரட்டி, தாக்கிவிட்டு அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கடந்த 20-ஆம் தேதி கடலாடி காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் அளித்துள்ளார். ஆனால், காவல் துறையினர் அதற்குரிய சி.எஸ்.ஆர் (CSR) ரசீது வழங்காமல் அவரை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
மது போதையில் காவலர். @CMOTamilnadu சார் இதையெல்லா கொஞ்சம் பாருங்க. pic.twitter.com/X24NBSSTmY
— Ramesh OB (@BotifiedBrain) May 28, 2026
மது போதையில் காவலர். @CMOTamilnadu சார் இதையெல்லா கொஞ்சம் பாருங்க. pic.twitter.com/X24NBSSTmY
— Ramesh OB (@BotifiedBrain) May 28, 2026
இது தொடர்பாகக் கேட்பதற்காக நேற்று ஏழுமலை மற்றும் அவரது வழக்கறிஞர் பிரசன்னா ஆகிய இருவரும் கடலாடி காவல் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கடலாடி கூட்டுச்சாலை அருகே காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் தங்களது புகார் குறித்து ஏழுமலையின் வழக்கறிஞர் பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு காமராஜ் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். அவரது பேச்சிலும் நடத்தையிலும் சந்தேகம் அடைந்த வழக்கறிஞர், அவர் கடுமையான மது போதையில் இருப்பதை அறிந்தார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் அதிகாரியே, மது போதையில் வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களை அலைக்கழிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர், பிரசன்னா அதனைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே, மது போதையில் சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்ளும் இத்தகைய செயல்கள் மீது உயர் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.