லஞ்சத்தை ஒழிக்க சிறப்பு ஏற்பாடு..! இந்த நம்பருக்கு உடனே கால் பண்ணுங்க..!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் CBI-யிடம் புகார் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புகார்களை தெரிவிப்பதற்காக 94444 42519 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும், hobacchn@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லஞ்ச புகார்கள் குறித்து பொதுமக்கள் எவ்வித பயமுமின்றி தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் CBI அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அண்மையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) 2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. இதில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரெயில்வே துறை ஆகியவை அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளன. பெறப்பட்ட மொத்த புகார்களில் வங்கித் துறை தொடர்பாக 9,933 புகார்களும், ரெயில்வே துறை தொடர்பாக 9,381 புகார்களும் பதிவாகி முதலிடத்தில் உள்ளன. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6,531 புகார்களும், உள்ளாட்சி அமைப்புகள் மீது 4,834 புகார்களும், நிலக்கரித் துறை பணியாளர்கள் மீது 4,118 புகார்களும், நிதித் துறை மீது 3,107 புகார்களும் பதிவாகியுள்ளன.
பதிவு செய்யப்பட்ட 70,584 புகார்களில், கடந்த டிசம்பர் 31-ம்தேதி நிலவரப்படி 64,905 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,679 புகார்கள் தற்போது விரிவான விசாரணையில் உள்ளதாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையே, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) சார்பில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், புகார் அளிக்க, 94444 42519 என்ற மொபைல் போன் வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் hobachchn@cbi.gov.in என்ற 'இ - மெயில்' முகவரியும் வெளியிடப்பட்டு உள்ளது.
இதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக, மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் புகாரளிப்பவரின் (லஞ்சப் புகார்) அடையாளம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என விரும்பினால், PIDPI (Public Interest Disclosure and Protection of Informers) விதியின் கீழ் தபால் மூலம் மட்டுமே புகார் அனுப்ப வேண்டும். கடிதத்தின் மேல் உறையில் "PIDPI" என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.