×

 “முதல்வர் விஜய் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- எஸ்.பி.வேலுமணி

 

விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எஸ்பி வேலுமணி தனது எக்ஸ் தளத்தில், “கொங்கு மண்டலத்தின் தொழில் & பொருளாதார வளர்ச்சிக்கு, கோவை விமான நிலைய விரிவாக்கம் மிகவும் அத்தியாவசியமானதாகும்.  2011 முதல் நமது கழக (அதிமுக) ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தபோது, இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. நில உரிமையாளர்களுக்கு நியாயமான, மிகச்சிறந்த இழப்பீட்டுத் தொகையை உறுதி செய்து, ₹2,081 கோடிக்கும் அதிகமான நிதியை அரசாணைகள் மூலம் பெற்றுத் தந்து, 627 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியை வெற்றிகரமாக சாத்தியமாக்கியது நமது கழக அரசே ஆகும். ஆனால், தற்போது அமைக்கப்படும் விமான நிலைய நுழைவுச் சாலைச் சுவரால் சின்னியம்பாளையம், இருகூர், ஆர்.ஜி.புதூர் பகுதி விவசாயிகளின் நிலங்களுக்குச் செல்லும் ஒரே வழியான 20 மீட்டர் உள்ளூர் சாலை மூடப்பட்டு, வீடுகளும் விவசாய நிலங்களும் தனிமைப்படுத்தப்படும் அபாயச் சூழல் உருவாகியுள்ளது.

வளர்ச்சியும் வேண்டும், அதே வேளையில் விமான நிலையத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளின் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும். தற்போதைய த.வெ.க. அரசின், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக, நேரடியாகத் தலையிட்டு அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுத்து, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இதற்காக அரசு செய்ய வேண்டியவை:

1) நுழைவுச் சாலையின் இருபுறமும் 10 மீட்டர் சேவைச் சாலை (Service Road) அமைத்து விவசாயிகளின் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.

2) வழித்தடத்தை உறுதி செய்ய முடியாத இடங்களில், எஞ்சிய நிலங்களை தற்போதைய நியாயமான சந்தை விலைக்கே, அரசே கையகப்படுத்த வேண்டும்.

3)தமிழக அரசும், இந்திய விமான நிலைய ஆணையமும் (AAI) உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினையை விரைவாகத் தீர்க்க வேண்டும்.

இத்திட்டத்தை தடையின்றி செயல்படுத்தவும், விவசாயிகளைக் காக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விமான நிலைய விரிவாக்கப் பணிகளைத் தொய்வின்றி விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.