☰
×

“இந்த காவலருக்கு உடனே விருது கொடுங்க”- எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

 

கோவில்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. வேல்முருகன் அவர்களுக்குப் பாராட்டுகள். தமிழக அரசு அவருக்கு உயரிய விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக எஸ்பி வேலுமணி தனது எக்ஸ் தளத்தில், “கோவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்திய கும்பலை, உயிரைப் பணையம் வைத்து, காரின் கூரை மீது பயணித்து விரட்டிப் பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. வேல்முருகன் அவர்களுக்குப் பாராட்டுகள். தமிழக அரசு அவருக்கு உயரிய விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்! கோவை மாவட்டம், விளாங்குறிச்சிப் பகுதியில் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு காரை காவலர்கள் சோதனையிட முயன்றுள்ளனர். அதற்கு ஒத்துழைப்புத் தர மறுத்த கடத்தல்காரர்கள், காவலர்களை தள்ளிவிட்டு காரை எடுத்துச் சென்று தப்ப முயற்சித்துள்ளனர்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட தலைமைக் காவலர் திரு. வேல்முருகன், அவர்களைப் பிடிப்பதற்காக, காரின் கூரை மீது ஏறி, பக்கவாட்டு கம்பிகளைப் பிடித்துக்கொண்டு உயிரைப் பணையம் வைத்து அந்தக் காரிலேயே 40கி.மீ. தூரம் வரைப் பயணித்து அவர்களைப் பிடித்துள்ளார். துணிச்சல் மிக்க இந்த நடவடிக்கைக்காக அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில், குறிப்பாகக் கோவையில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று நான் சட்டமன்றத்திலேயே பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.பலருக்கு முன்னுதாரணமாகத் திகழும் காவலர் திரு. வேல்முருகன் அவர்களைப் போன்ற காவலர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். எனவே, காவலர் திரு. வேல்முருகன் அவர்களுக்கு தமிழக அரசு உயரிய விருதினை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க, சோதனை மற்றும் கண்காணிப்பைத் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.