×

கோவை வ.உ.சி பூங்கா இடமாற்றத்தை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்- எஸ்.பி.வேலுமணி

 

கோவை உயிரியல் பூங்காவை இடமாற்றம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.  

தீபாவளி பண்டிகையையொட்டி அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அதிமுக கோவை மாவட்ட தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் சட்டமன்ற உறுப்பினர்கள் கிணத்துக்கடவு தாமோதரன், சிங்காநல்லூர் ஜெயராமன், அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கப்பட்டது. கோவை,திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2500 தொழிலாளர்களுக்கு இன்று கைக்கடிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக தான். தொழிலாளர்களின் ஒரே பாதுகாவலர் எடப்பாடியார் தான்.

கோவையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயிரியல் பூங்காக்களில் இருந்த உயிரினங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நான் அமைச்சராக இருந்த பொழுது இந்த உயிரியல் பூங்காவை விரிவு படுத்தி மைசூர் உயிரியல் பூங்காவை விட பெரியதாக உருவாக்க திட்டமிட்டு இருந்தடு. கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக புதிய திட்டங்கள் தராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இருக்கின்ற திட்டங்களுக்கு மூடு விழா செய்கிறார்கள்.

கோவை மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு உயிரியல் பூங்கா தான் . புறநகர் பகுதியான எட்டிமடை பகுதியில் ஒரு உயிரியல் பூங்கா அமைக்க சூழல் இருந்த போதும் அதை வேண்டாம் என்று மாநகருக்குள்ளேயே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக நிறுத்தி இந்த பூங்காவை விரிவு படுத்தி பெரிய பூங்காவாக செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். கோவை மக்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த பூங்கா இடமாற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

தற்போதைய முதலமைச்சர் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது அனைத்து பகுதிகளுக்கும் ஒரு பெட்டியை கொண்டு வந்து யார் வேண்டுமானாலும் தன்னை சந்திக்கலாம் என்று கூறினார.  ஆனால் தற்போது தொழில் அமைப்பினர், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டோர் பல கோரிக்கைகளை வைத்தாலும் அதனை அமைச்சர்களும் கேட்பதில்லை, முதலமைச்சரை சந்திக்கவும் முடியவில்லை. வருகிற திங்கட்கிழமை கோவை தொழிற்சங்கங்களின் கோரிக்கை மனுவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகிய தாங்கள் நேரில் சென்று பெற உள்ளது” என்றார்.