”ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு குடிச்சிருக்காங்க” - சௌமியா அன்புமணி
பெண்களின் பொருளாதார சுதந்திரத்தைப் பறித்தது டாஸ்மாக்தான் என பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, “16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க சில நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. தமிழக அரசும் சிறார்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுப்பதற்கான தீர்மானம் கொண்டு வந்து அழுத்தம் தரலாம். மது, போதை மற்றும் செல்போன் பயன்பாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள். 2005-ல் இந்திய அளவில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்படுவதற்கு முன்பே, தமிழ்நாட்டில் அந்த உரிமை வழங்கப்பட்டது. ஆனால், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டாலும், அதை அனுபவிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. பெண்களின் பொருளாதார சுதந்திரத்தைப் பறித்தது டாஸ்மாக்தான்.
2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 789 கோடி ரூபாய்க்கு குடிச்சிருக்காங்க. பொங்கல் பண்டிகையின் போது 725 கோடிக்கு குடிச்சிருக்காங்க. நியூ இயர் ஒரு நாளில் மட்டும் ரூ.100 கோடிக்கு குடிச்சு இருக்காங்க. இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வருகிறது..? இதெல்லாம் பெண்களிடம் இருக்க வேண்டிய காசு. குடும்பத்திற்கான காசு. போய் ஊர் சைடுல பாருங்க.. பெண்கள் எல்லாம் வெறும் மஞ்சள் கயிறுதான் போட்டு இருப்பாங்க” என்றார்.