×

ரயில் டிக்கெட் எடுத்துட்டு பஸ்ல போலாம்... தெற்கு ரயில்வேயின் சிறப்பு இலவச பேருந்து சேவை!

 

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10,11-ல் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில், சிறப்பு பஸ் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது. வருகிற 28-ந்தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில்(பீக் அவர்ஸ்) தாம்பரம்-கடற்கரை, கடற்கரை-தாம்பரம் இடையே இன்று முதலே 20 சிறப்பு பஸ் சேவைகள் தொடங்கப்பட்டது. இந்த சிறப்பு பஸ்கள் முன்பு 'தெற்கு ரெயில்வே ஒப்பந்த பஸ்' என ஆங்கிளத்தில் அறிவிப்பு ஸ்டிக்கெர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த சேவையை தடையின்றி செயல்படுத்த அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் பயணிகளுக்கு வழிகாட்டவும், உதவவும் ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகளின் கூட்டத்தை நெறிப்படுத்தவும், பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் மின்சார ரெயில்களுக்கான டிக்கெட் மற்றும் மாதாந்திர பாஸ் உள்ளதாக என்பதை சோதனை செய்கின்றனர். இதன் மூலம் சீரான மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது.

இந்த பஸ் சேவை மின்சார ரெயில் டிக்கெட் மற்றும் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மின்சார ரெயில் பயணிகள் நெரிசல் நேரங்களில் எவ்வித தடையும் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள முடியும். தாம்பரம்-கடற்கரை இடையே இருமார்க்கமாகவும் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களை பயணிகள் தேவைக்கு ஏற்ப பயண்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.