×

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: சீசன் பாஸ் இருந்தா பஸ்ஸில் இலவசமா போகலாம் - தெற்கு ரயில்வே அசத்தல் ஏற்பாடு..!!

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ரயில் சேவைகளில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, புறநகர் மின்சார ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் புதிய தூண்கள் அமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனால், தற்போது மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான 5 மற்றும் 6-ம் நடைமேடைகளில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகின்றன.

கட்டுமானப் பணிகள் காரணமாக மின்சார ரயில்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதால், தினமும் ரயிலையே நம்பியிருக்கும் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய ரயில்கள் இல்லாததால், எஞ்சியுள்ள ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்குத் தங்கள் இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

ரயில் சேவை குறைக்கப்பட்டதன் நேரடித் தாக்கம் மாநகரப் பேருந்துகளில் எதிரொலிக்கிறது. ரயிலில் பயணிக்க வேண்டிய ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளை நோக்கித் திரும்புவதால், மாநகரப் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்து நெரிசலும், பேருந்து கூட்டமும் பொதுமக்களை வியர்வை மழையில் நனைந்தபடி அன்றாடம் அலுவலகம் செல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.

மக்களின் இந்தத் துயரத்தைக் குறைக்க தெற்கு ரயில்வே அதிரடி மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளது. அதன்படி, ரயில் பயணிகள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் சிறப்பு மாநகரப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் காலை 6:40 மணி முதல் 9:40 மணி வரை 7 நிமிட இடைவெளியில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செல்லுபடியாகும் ரயில் டிக்கெட் அல்லது சீசன் பாஸ் வைத்திருப்பவர்கள் இந்தப் பேருந்துகளில் எவ்விதக் கட்டணமும் இன்றி பயணிக்கலாம்.

காலை 6:30, 6:37, 6:44, 7:05, 7:12, 7:26, 7:33, 7:40,7:54, 8:01, 8:15,8:22, 8:29, 8:43 ஆகிய நேரங்களில் சிறப்பு பேருந்துகள் அண்ணா சாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம் வழியாக செல்லும். 6:51, 7:19, 7:47,8:08,8:36, ஆகிய நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் கிண்டி, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை வழியாக இயக்கப்படும் .

இந்தச் சிறப்புப் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி வழியாகச் செல்லும். இதில் ஒரு குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் அண்ணா சாலை, சேப்பாக்கம் மற்றும் தலைமைச் செயலகம் வழியாகச் செல்லும். மற்ற சில பேருந்துகள் கிண்டி, தி.நகர், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் வழியாகப் பாரிமுனையை அடையும் வகையில் வழித்தடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவ இந்தப் பேருந்துகளில் தெற்கு ரயில்வேயின் டிக்கெட் பரிசோதகர்களும் பணியில் இருப்பார்கள்.

பேருந்து வசதி மட்டுமன்றி, மின்சார ரயில்களிலும் நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. பீக் ஹவர்ஸ் எனப்படும் அதிக நெரிசல் நிலவும் நேரங்களில், இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் நிலையப் பணிகள் முடியும் வரை பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க இந்த ஒருங்கிணைந்த ஏற்பாடுகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.