சாரி சி.எம் சார்... எங்க ஆபீஸ் ரோட்டை தர முடியாது - மறுப்பு தெரிவித்த விப்ரோ நிறுவனர்..!
பெங்களூரு தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று , இப்லூர் சந்திப்பில் உள்ள அவுட்டர் ரிங் ரோடு (ORR) நடைபாதையில் உச்ச நேரங்களில் காணப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஆகும். இது இயக்கம், உற்பத்தித்திறன் மற்றும் நகர்ப்புற வாழ்க்கையின் தரத்தை மோசமாக பாதிக்கிறது.
கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க விப்ரோ (Wipro Campus) கேம்பஸின் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனாகிய ஆசிம் பிரேம்ஜி-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் ஆசிம் பிரேம்ஜி சித்தராமையாகவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார். நாங்கள் சர்ஜாபூரை வளாகத்தை சிறப்பு பொருளாதார மண்டலாக வைத்துள்ளோம். உலகளாவிய சேவை பணிகளுக்கான அந்த இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடுமையான அணுகுதல் கட்டுப்பாடு உள்ளது.
பொதுப் பாதைக்காக அல்லாமல் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரத்யேக தனியார் சொத்து என்பதால், குறிப்பிடத்தக்க நிர்வாகம் மற்றும் சட்டரீதியான சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். மேலும், தனியார் சொத்துக்கள் வழியாக பொது வாகன இயக்கம் ஒரு நிலையான, நீண்டகால பயனுள்ளதாக தீர்வாக இருக்காது எனவும் அரசு மற்றும் நிபுணர்களுடன் இணைந்து அறிவியல், தரவுத்தள அடிப்படையிலான முழுமையான போக்குவரத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
"பெங்களூரு ORR பகுதி, இந்தியாவின் ஏற்றுமதி மையமாகவும், உலகத் தரத்திலான ஐடி சேவைகள் வழங்கும் மையமாகவும் விளங்குகிறது. எனவே போக்குவரத்து பிரச்சனைக்கு ஒரே தீர்வு கிடையாது; பல்வேறு கோணங்களில் அணுகும் பொழுதே நிலையான முடிவுகள் கிடைக்கும்," என்று அவர் அறிவுரை தெரிவித்துள்ளார்.