பெற்றோர் வாங்கிய கடனுக்கு மகனுக்கு நேர்ந்த கொடூரம்! இருளர் சமூக மாணவனுக்கு கொடூர தண்டனை..!
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள சிறுவாலை கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர், தனது மனைவி மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை நடத்தி வரும் பிரபாகரனிடம் இருந்து இவர் முன்பணமாக ரூ.50,000 கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவரது செங்கல் சூளையிலேயே அவரும், அவரது மனைவியும் வேலை செய்து வந்துள்ளனர்.
இதனிடையே, வாங்கிய முன்பணம் முழுமையாக கழிவதற்குள் அவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரபாகரன் பல முறை பணத்தை திருப்பிக் கேட்டும், அவர் திருப்பி தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில், இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த பிரபாகரன், இருளர் சமூகத்தை சேர்ந்தவரை அவரை கடுமையாக திட்டியும், மிரட்டி விட்டும் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, குடும்ப சூழல் காரணமாக பணத்தை இப்போது திருப்பித் தர முடியவில்லை என்றும், ஒரு சில நாட்களில் தந்து விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பணத்தை உடனடியாக தர வேண்டும் என பிரபாகரன் மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல இருளர் சமூகத்தை சேர்ந்தவரின் மகன் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, பள்ளி அருகே உள்ள மறைவான இடத்தில், மாணவனை மறித்த பிரபாகரனும், அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் அவரை கடுமையாக தாக்கினார்களாம். இதையடுத்து, காயமடைந்த மாணவன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது வாயை துணியால் கட்டி காலணியால் தாக்கியதாகவும், வயிறு மற்றும் முதுகிலும் கடுமையாக அடித்து, பிளேடால் வாயை கிழித்ததாகவும் போலீசாரிடம் அந்த மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மாணவரின் தந்தை, கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரபாகரனை கைது செய்துள்ளனர். தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.