மாமியார் பேச்சை கேட்டு தாய்க்கு விஷம் வைத்த மகன் கைது
மாமியார் பேச்சை கேட்டு தாய்க்கு விஷம் வைத்த மகன் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த பர்புரா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங்குக்கு முகேஷ், ரவீந்திரா என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகிவிட்டது. ரவீந்திராவுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபதேஹாபாத், ரன்வாய் கிராமத்தில் திருமணம் நடந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, அவரது மனைவி குடும்ப சண்டையால் தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அதன் பிறகு அவர் இன்னும் மாமியார் வீட்டுக்கு திரும்பவில்லை.
காவல்துறை விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட ரவீந்திரா, ஜூலை 8 ஆம் தேதி தனது மனைவியை அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு, அவரது மாமியார் பூல்வதி, தன் மகளை அனுப்ப மறுத்துவிட்டார். அவர், "உன் அம்மாவைக் கொன்றுவிடு, பிறகு என் மகளை அனுப்புகிறேன்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் ரவீந்திராவிடம் ஒரு விஷத்தையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து அதனை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்த ரவீந்திரா, அவரது தாயார் சாப்பிட வைத்திருந்த கொண்டைக்கடலையில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைந்தது. விஷம் வைக்கப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குற்றம் சாட்டப்பட்ட மகனை காவல்துறை கைது செய்துள்ளது, அதே நேரத்தில் அவரது மாமியாரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.