தன்னை வளர்த்த மக்களுக்கு விரோதமாக விஜய் தேர்தலில் முடிவெடுக்கக்கூடாது- சினேகன்
ஜனநாயகன் படம் தொடர்பான சென்சார் பிரச்சனை குறித்து விஜய்யே பேசாதபோது மற்றவர்கள் பேசுவது சரியாக இருக்காது என கவிஞர் சினேகன் தெரிவித்தார்.
சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு பட்டிமன்றம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய சமையல், சமத்துவப் பொங்கல் என ஐம்பெரும் விழாவாக இந்த பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கல்லூரித் தாளாளர் வெங்கடேஷ் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தம்முடைய திரைப்படப் பாடல் அனுபவங்கள், வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைத்து, அனுபவமே தனது வாழ்க்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். விழாவில் கிராமிய மணம் கமழும் பல்வேறு அரங்குகள், ராட்டினங்கள், பஞ்சு மிட்டாய், சவ்வு மிட்டாய், குதிரை வண்டி, உறியடி என கிராமம் போல பொங்கல் கொண்டாடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சினேகன், “ஜனநாயகன் படம் சென்சார் தொடர்பாக வெளியாகவில்லை என்பது குறித்து முதலமைச்சர், கமல்ஹாசன் உட்பட அனைவரும் பேசும் நிலையில், அதில் நடித்த விஜய் எதுவும் பேசவில்லை என்பது வருத்தம்தான். அவரே பேசவில்லை என்றபோது மற்றவர்கள் பேசுவது சரியாக இருக்காது. கரூர் விவகாரம் தொடர்பாக விஜய்யை சட்டத்தின்கீழ் சிபிஐ விசாரிப்பது தொடர்பாக கருத்து சொல்வது சரியாக இருக்காது. விஜய் கலைக்குழந்தையாக வளர்ந்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அதனால் அவர் மக்களுக்கு விரோதமாக எந்த முடிவும் எடுத்துவிடக்கூடாது என்பது என்னுடைய அறிவுரை. பிக்பாஸ் என்பது ஒரு கேம்ஷோ, ஆனால் அதுவே வாழ்க்கை இல்லை. நாட்டில் பேச வேண்டிய பிரச்சனைகள் ஆயிரம் இருக்கும்போது இதைப்பற்றி பேசுவது தேவையற்றது” எனக்கூறினார்