திருச்செந்தூர் கோயிலில் சிறுவியாபாரிகள் அகற்றப்படவில்லை- கோயில் நிர்வாகம்
திருச்செந்தூர் கோயிலில் சிறுவியாபாரிகள் அகற்றப்படவில்லை என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தைச் சுற்றி இருந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளை கோவில் நிர்வாகம் அகற்றிபட்டதாக செய்திகள் வெளியானது. திடீரென கடையை அகற்றியதால் எங்கள் குடும்பம் நிற்கதியாய் இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளத்தில் பரவியது. நாளுக்கு நாள் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், நடைபாதைகளில் எவ்வித இடையூறு ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டது.
கோயில் நிர்வாகத்தின் இத்தகைய செயலுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் சிறுவியாபாரிகள் அகற்றப்படவில்லை என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சிறுவியாபாரிகளின் வியாபரத்தை தடுக்கவோ அல்லது முடக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. காவல்துறையினர் முன்னிலையில், ஒலிபெருக்கி மூலம் நேற்று அறிவிப்பு செய்து, பக்தர்களுக்கு இடையூறு இஆத பகுதிகளுக்கு தாமாகவே இடம்பெறுமாறு மட்டுமே கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.