×

கட்சி அலுவலகத்தை கேவலமாகச் சித்திரிப்பு: CPI போராட்டத்தில் கைக்கோர்க்கும் CPI(M)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லம் சென்னை தி.நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் படத்தை போட்டு, விபச்சாரம் நடக்கும் இடம் எனக் கேவலமாகச் சித்திரித்து ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். அதைக் கண்டித்து சிபிஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) போராட்டம் நடத்த விருக்கிறது. அந்தப் போராட்டத்தில் அவர்களோடு கைக்கோர்க்கிறது சிபிஎம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்). இது தொடர்பாக சிபிஎம் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லம் சென்னை தி.நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் படத்தை போட்டு, விபச்சாரம் நடக்கும் இடம் எனக் கேவலமாகச் சித்திரித்து ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். அதைக் கண்டித்து சிபிஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) போராட்டம் நடத்த விருக்கிறது. அந்தப் போராட்டத்தில் அவர்களோடு கைக்கோர்க்கிறது சிபிஎம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).

இது தொடர்பாக சிபிஎம் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தை அவதூறாக சித்தரிக்கும் பதிவு ஒன்றை விஷ்வா என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும் அரசியல் சமூக தளங்களில் செயல்படும் பெண் செயல்பாட்டாளர் ஒருவரை அவதூறு செய்யும் பதிவும் அதில் இடம் பெற்றிருக்கிறது. இத்தகைய கீழ்த்தரமான பதிவும் அதனுடைய பின்னூட்டங்களும் வன்மையான கண்டனத்துக்குரியவை. இதனைக் கண்டித்து, வரும் 22ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தகைய பதிவுகள் வலைத்தள சுதந்திரம் அல்ல… வலைத்தள அராஜகம் என்பதைத் திட்டவட்டமாக சுட்டிக்காட்டுகிறோம். எங்கோ ஒரு மூலையில் போகிற போக்கில் ஒருவர் போடும் பதிவாக இதனை பார்த்து கடந்து போய்விட முடியாது. கருத்துக்களுடன், கொள்கைகளுடன் மோத திராணியற்ற சக்திகளின் வழிகாட்டுதலிலோ அல்லது அத்தகைய மனநிலை கட்டமைக்கப்படுவதன் காரணமாகவோ இந்த இழி செயல் நடப்பதாகவே கருத வேண்டும்.
ஒரு பெண்ணை விமர்சிக்க வேண்டும் என்றால் அவரைப்பற்றி பாலியல் ரீதியான அவதூறு, ஒரு ஆணை விமர்சிக்க வேண்டுமென்றால் அவரது பெண் உறவினர்கள் பற்றிய கொச்சையான கருத்துக்கள் போன்ற ஆண் மேலாதிக்க கண்ணோட்டம் தான் எதிர்வினையாக வரும் என்றால், விவாதத்திற்கு வழியேது? மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களோடு பொருள் பொதிந்த விவாதத்தை நடத்த வக்கற்றவர்களின் பிரச்சாரத்தை ஒட்டுமொத்த சமூகமும் நிராகரிக்க வேண்டும்.

balakrishnan CPI(m)

மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மதவாத அரசியலுக்கு உறுதியான எதிர்ப்பைத் தெரிவிப்பவர்களாக இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்கிற காழ்ப்புணர்வும், கொரோனா எதிர்ப்பு செயல்பாட்டில் மத்திய அரசின் தோல்வியை மூடிமறைத்து திசை திருப்ப வேண்டும் என்கிற குறுகிய அரசியல் உணர்வும் தான் இத்தகைய அவதூறுகளுக்கு பின்புலமாக இருக்கிறது.

போலியான செய்திகளையும், போலியான புகைப்படங்களையும் உற்பத்தி செய்து பரப்புரை நடத்தி பலமுறை அம்பலப்பட்டவர்கள் தான் சங்பரிவார சக்திகள். ஆர்.எஸ் .எஸ்., பாஜக தங்களது அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், அவதுhறுசேறை அள்ளித்தெளித்து வருவதை ஒரு போதும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இச்சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்திருக்கும் புகாரின் மீது கறாரான நடவடிக்கையை வலியுறுத்தியும், இப்படியான அவதூறுகள் இடதுசாரி அரசியல் இயக்கத்தையும், முற்போக்கு செயல்பாட்டாளர்களையும் அச்சுறுத்தி விடமுடியாது என்பதை பறைசாற்றியும் இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ள இயக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொள்ளும் என்பதோடு ஜனநாயக அமைப்புகளும், தனிநபர்களும் கண்டனம் முழங்க முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.