"அமைதியாவே இருந்தீங்கனா மிகப்பெரிய ஆபத்து" - விஜய்க்கு சிவசங்கர் எச்சரிக்கை
நிர்மல்குமார் அமைச்சரவையில் இருக்கிற எல்லா அமைச்சருக்கும் அவர்தான் ‘Mouthpiece’. Mouthpiece அமைச்சரா இருக்குறாரு ஆனா அவர் துறையை பத்தி கேள்வி கேட்டா தெரியாது சொல்வார் என முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர், “முதலமைச்சர் என்றாலே மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நினைவுக்கு வருவதால், தன் இயலாமையை மறைக்கவே திமுக திட்டங்களின் பெயர்களை மாற்ற நினைக்கிறார் விஜய். நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் தாயுமானவர் திட்டம் ஆகிய திட்டங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. தவெகவால் எதுவும் செய்யமுடியவில்லை எனவே திமுகவின் திட்டங்களை பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கலர் மாற்றுவது, பெயர் மாற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் மக்கள் மனதில் எதிர்ப்புதான் திரும்பும்.
மின்சாரத்துறையின் பிரச்சனைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யாமல், தினமும் வாட்ஸ்அப் செய்திகளை வைத்துக்கொண்டு ஆளுங்கட்சி பேசுவது சரியல்ல. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எழாத மின் தட்டுப்பாடு பிரச்சனை, இந்த குறுகிய காலத்தில் ஏன் ஏற்படுகிறது? மக்கள் படும் துன்பங்களுக்கு குரல் கொடுப்பது எதிர்க்கட்சியான எங்களின் கடமை. நிர்மல்குமார் அமைச்சரவையில் இருக்கிற எல்லா அமைச்சருக்கும் அவர்தான் ‘Mouthpiece’. Mouthpiece அமைச்சரா இருக்குறாரு ஆனா அவர் துறையை பத்தி கேள்வி கேட்டா தெரியாது சொல்வார். உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் கூட கள்ள மெளனம் காப்பதுதான் உங்க பதிலா? பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தால் மக்கள் மத்தியில் பிரச்சனை ஏதும் வெடிக்காது என்று நினைக்கிறீங்க. உங்க அமைதியால் ஒரு கட்டத்தில் புரட்சி வெடிக்கும். இதை உணரவில்லை எனில் ஆபத்து உங்களுக்குதான்” என்றார்.