×

அரையாண்டு லீவில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகள் உயிரிழப்பு! பெற்றோர்களே உஷார்

 

சிவகாசியில் வீட்டின் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த பெண் காவலரின் மகள் உள்பட இரண்டு சிறுமிகள் கேட் சுவர் சரிந்து இரும்பு கேட் மேலே விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி-ராஜேஸ்வரி தம்பதியினர். ராஜாமணி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரிக்கு 11 வயதில் 7-ம் வகுப்பு பயிலும் கவின் என்ற மகனும், 6- வயதில் 2-ம் வகுப்பு படிக்கும் கமலிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் பெண் காவலர் ராஜேஸ்வரியின் சகோதரியான சங்கரன்கோவில் நாரணாபுரத்தைச் சேர்ந்த செவிலியர் தனலட்சுமி தனது 6- வயது மகன் நிஷாந்த் மற்றும் 4 வயது மகள் லசிகாவுடன் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி பணிக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டின் முன்பாக உள்ள கேட்டில் சிறுமிகள் கமலிகாவும், லசிகாவும் விளையாடிக்கொண்டிருந்தனர். 

அப்போது எதிர்பாராத விதமாக உறுதித் தன்மை இல்லாத சுவர் சரிந்து இரும்பு கேட்டுடன்  விழுந்ததில் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் கமலிகா மற்றும் லசிகா  ஆகிய இரண்டு சிறுமிகளும் இரும்பு கேட்டினுள் சிக்கி தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இருவரையும் மீட்ட உறவினர்கள் உடனடியாக சிவகாசி பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் சுவர் இடிந்து இரும்பு கேட் விழுந்ததில்  உயிரிழந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.