சிவகாசி: ஆய்வுக் குழுவினரால் பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் - தொழிலாளர்கள் வேதனை..!!
சிவகாசியில் ஆய்வுக் குழுவினரால் பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாகவும், வேலையின்றி தவிப்பதாகவும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடி விபத்துகள் நடந்து வருகின்றன. இந்த வெடி விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு அரசுத்துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் அன்றாடம் பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி விதிமீறலுள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் கடந்த 10- மாதங்களில் மட்டும் விதிமுறைகளை மீறியதாக 80-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளத்துடன், இதுவரை மீண்டும் அந்தப் பட்டாசுத் தொழிற்சாலைகளை திறக்க அனுமதி வழங்காமல் இருந்து வருகின்றனர்.
இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்- பெண் தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுவரை விதிமீறல் காரணமாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், 42- நாட்களுக்குள் மீண்டும் பட்டாசுத் தொழிற்சாலைகளை திறந்து பட்டாசு உற்பத்தி செய்வதற்கான அனுமதியை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வழங்கி வந்தது. ஆனால் தற்காலிக உரிமம் ரத்து செய்யப்படும் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு 10- மாதங்களுக்கும் மேலாயும் மீண்டும் பட்டாசு உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் பட்டாசுத் தொழிற்சாலைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் மூடப்பட்ட பட்டாசுத் தொழிற்சாலையின் முன்பாக அமர்ந்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 மாதங்களுக்கும் மேலாக வேலையிழந்து வருமானமின்றி, குடும்பத்தை நடத்த முடியாமலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். உடனடியாக பட்டாசுத் தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்கவில்லை என்றால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.